திருக்கோவலூர் திவ்ய க்ஷேத்திரத்திற்கு நான்கு புறமும் கோபுரங்கள் உண்டு. அக்கோபுரங்களில் கிழக்கு வாசல் கோபுரம்
மிகவும் உயரமானது, ஒரு நூற்று தொன்னூற்று ஐந்து அடி உயரம் கொண்டது ஆகும். திருக்கோவிலுக்கு உள்ளே சென்று த்வஜச்தம்பத்தை சேவித்து நிற்கும் போதே க்ஷேத்ரபாலனான மூலவர் ஸ்ரீ வேணுகோபாலனையும் உத்சவர் ஸ்ரீ ராஜகோபலனையும் சேவிக்கலாம். இந்த சந்நித்திக்கு போகும் வழியிலே வாகன மண்டபம் உள்ளது. ஆவணி மாதத்தில் பத்து நாட்கள் பிரம்மோத்சவம் நடைபெறுகிறது.
ஸ்ரீ வேணுகோபாலனை சேவித்துக் கொண்டு வெளியே வந்தால் இச்சந்நிதிக்கு நேராக கண்ணாடி அரை உள்ளது. கண்ணாடி அறைக்கு இடது பக்கத்தில் திருமடப்பள்ளியும் வலப்பக்கத்தில் சிறிது தூரம் நடந்தால் தாயார் சந்நிதியும் உள்ளது. தாயார் சந்நித்திக்கு போகும் வழியில் ஆழ்வார்களின் மூலவர் சந்நிதி, யாகசாலை,அஞ்சலி ஆஞ்சநேயர் சந்நிதி, மற்றும் மண்டபங்களின் அழகிய வடிவமைப்பு ஆகியவை சேவிக்கலாம்.
மூலவர் தாயார் திருநாமம்: ஸ்ரீ பூங்கோவல் நாச்சியார்.
உத்சவர் தாயார் திருநாமம்: ஸ்ரீ புஷ்பவல்லி நாச்சியார்.
தாயார் சந்நித்திக்கு இடது புறத்தில் ஸ்ரீ சக்ரத்தாழ்வாரின் சந்நிதி உள்ளது. தாயார் சந்நிதியை பிரதட்சிணம் பண்ணி வந்தோமே ஆனால் ஸ்ரீ சக்ரதாழ்வனின் சந்நிதியை சேவித்துக்கொண்டு மேற்கு வாசல் கோபுரத்தையும் காட்டு ராமர் சன்னிதியையும் சேவிக்கலாம்.
பெருமாள் சந்நித்திக்குச் செல்ல தாயார் சந்நிதியை சேவித்துக் கொண்டு திருமடைப்பள்ளி வரை திரும்பி வந்து இடப்பக்கம் திரும்ப வேணும். ஸ்ரீ ஆயனார் சந்நிதிக்கு போகும் வழியிலே இரகசிய க்ரந்தங்களுக்காகவே திரு அவதரித்த ஸ்ரீ பிள்ளை உலகாரியனின் சந்நிந்தியை சேவிக்கலாம். பின்பு த்வார பாலகர்களை சேவித்துக் கொண்டு உள்ளே செல்லும் போது இடப்பக்கத்தில் விந்திய மலையில் இருந்து எழுந்தருளின ஸ்ரீவிஷ்ணு துர்க்கை சந்நிதி உள்ளது. வேறு எந்த திவ்யதேசத்திலும் ஸ்ரீ விஷ்ணு துர்க்கை சந்நிதி இருப்பது அரிது. விந்திய மலையில் இருந்து காவல் தெய்வமாக இங்கு எழுந்தருளி இருப்பதாக புராண வாக்யங்கள் தெரிவிக்கிறது.
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் "கற்புடைய மடக்கணி காவல் பூண்ட...பூங்கோவலூர் தொழுதும் போது நெஞ்சே" என்று ஸ்ரீ விஷ்ணு துர்கையையும் சேர்த்தே மங்களாசாசனம் பண்ணுகிறார். இது மற்றொரு சிறப்பு ஆகும். ஸ்ரீ விஷ்ணுதுர்க்கை சந்நித்திக்கு எதிராக உள்ளது ஆழ்வார்களின் உத்சவ மூர்த்தி சந்நிதி.
ஸ்ரீ திரிவிக்கிரம எம்பெருமான் இடது திருக்காலால் பூமியில் நின்ற படியும், தனது வலத் திருக்காலை உலகளக்க மேலே உயர்த்திய படியும் சேவை சாதிக்கிறார். இந்த திவ்யதேசத்தைத் தவிர அனைத்து திவ்யதேசங்களிலும் த்ரிவிக்ரம எம்பெருமான் இடது திருக்காலை உயர்த்திய படியே தான் சேவை சாதிக்கிறான். இந்த ஒரு திவ்யதேசத்தில் மட்டும் தான் வலது திருக்காலை உயர்த்தியபடி சேவை சாதிக்கிறான். மேலும் மேல் உலகத்தை ஒரு திருவடியாலும், கீழ் உலகத்தை மற்றொரு திருவடியாலும் அளந்த பின்பு மற்றொரு அடிக்கு எங்கே இடம் என்று மகாபலியிடம் கேட்ட படிக்கு ஸ்ரீ திரிவிக்கிரம எம்பெருமானின் வலத்திருக்கையின் ஆள் காட்டி விரல் இருக்கும். அதையும் அற்புதாமாக சேவிக்கலாம். மேலே உயர்த்திய திருவடியை நான்முகக் கடவுளான பிரம்மா ஆராதிக்கிறார். எம்பெருமானுக்கு வலக்கையில் சங்கும் இடது கையில் சக்கரமும் இருக்கும் - சங்க நாதம் பண்ணுவதாக ஐதிகம். இதை வேறு ஒரு திவ்யதேசத்திலும் காண இயலாது.
மற்ற அனைத்து திவ்யதேசங்களிலும் வலக்கையில் சக்ரத்தாழ்வானும், இடக்கையில் சங்கமும் இருக்கும். மகாபலி சக்ரவர்த்தியின் குமாரர் நமுசி மகாராஜா எம்பெருமானுக்கு பாத பூஜை பண்ணுகிறார்.
மேலும் மூலவருடன் முதல் ஆழ்வார்களான பொய்கையார், பூதத்தார், பேயார் மற்றும் மஹா லக்ஷ்மி, பிரஹ்லாதன், மிருகண்டு மகரிஷி, மிருகண்டு மகரிஷியின் பத்னி, அசுர குரு சுக்ராசார்யர், ஆகியோரையும் மூலவர் சந்நிதியிலே சேவிக்கலாம். எம்பெருமானுடைய புன்சிரிப்பும், சாலக்ராம மாலையும், தசாவதார ஒட்டியானமும், தங்க கவசங்களும், தங்கக் கிரீடமும், அழகான திருமண்காப்பும், சேவிக்க வருவோர் எல்லோரையும் "என் அமுதினைக் கண்ட கண்கள் மற்றொன்றினைக் காணாவே" என்று "வாயினால் பாடி மனத்தினால் சிந்திக்க வைக்கும்".
மூலவர் சந்நிதியுள் அனந்தன் மற்றும் வாசுகி ஆகியோரை சேவிக்கலாம். மேலும் மூலவர் சந்நிதிக்கு பின்புறமாக ஸ்ரீ வாமனின் சந்நிதி அமைந்துள்ளது. ஸ்ரீ வாமனனுக்கு வேறு ஒரு திவ்யதேசத்திலும் சந்நிதி இருப்பதாக தெரியவில்லை. மாதம் தோறும் திருவோண நக்ஷத்திரம் அன்று ஸ்ரீ வாமனனுக்கு திருமஞ்சனம் நடைபெறுகிறது.
பெருமாள் சந்நிதி பிரஹாரத்தில் அமைந்துள்ள சந்நிதிகள் பின்வருமாறு:
வீர ஆஞ்சநேயர் சந்நிதி, ஸ்ரீ லக்ஷ்மி நாராயணன் சந்நிதி, ஸ்ரீ லக்ஷ்மி வராஹன் சந்நிதி, ஸ்ரீ நருசிம்மன், ஸ்ரீ மத்ஸ்ய மற்றும் ஸ்ரீ கூர்ம ஆகிய விபவ அவதாரங்களின் மூலவர் சந்நிதி, ஸ்ரீ ஆண்டாள் சந்நிதி, ஸ்ரீ ஆளவந்தார், ஸ்ரீ திருக்கோட்டியூர் நம்பி மற்றும் ஸ்வாமி எம்பெருமானார் ஆகியோர்களின் மூலத் திருமேனி ஒரே சந்நிதியில், ஸ்ரீ ஆண்டாள் சந்நிதி, படைத் தளபதியான ஸ்ரீ சேனை முதலியார் சந்நிதி மற்றும் ஸ்ரீ மணவாள மாமுனிகள் சந்நிதி ஆகியவை ஆகும். ஸ்ரீ சேனை முதலிகளின் சந்நிதிக்கு பின்பாக நின்று கொண்டு விமானத்தை சேவித்துக் கொள்ளலாம். விமானத்தின் திருநாமம் ஸ்ரீ கர விமானம்.
எம்பெருமானார் சந்நிதிக்கு முன்பாக அமைந்துள்ளது திருப்பரமபதவாசல் மற்றும் ஸ்ரீ ஏகாதசி மண்டபம். இந்த மண்டப்பத்தில் தான் இராப்பத்து உத்சவம், வசந்தோத்சவம் ஆகியவை நடைபெறும். இந்த மண்டபத்தில் ஸ்ரீ வரதராஜப் பெருமாளுக்கு சந்நிதி உண்டு.
இந்தத் திருத்தலத்தில் தசாவதாரங்களில் பரசுராம அவதாரம், பலராம அவதாரம் மற்றும் கல்கி அவதாரம் ஆகியவை தவிர்த்து மற்றுமுள்ள ஏழு அவதாரங்களையும் சேவிக்கலாம்.
ஸ்தல வ்ருக்ஷம்: புன்னை - ஏகாதசி மண்டபத்துக்கு முன்பாக உள்ளது.
தாசானு தாசன்
இராமானுஜ சிஷ்யன்
No comments:
Post a Comment