திருக்கோவலூர்

ஆழ்வார்களால் மங்களாசாசனம் பண்ணப்பட்ட முதல் திவ்யதேசம் திருக்கோவலூர்

Tuesday, March 26, 2013

திருநெடுந்தாண்டகம் ஆறாம் பாசுர அர்த்தம்:

ஸ்ரீ:
ஸ்ரீமதே இராமானுஜாய நம:
ஸ்ரீமத் வரவர முநயே நம:
ஸ்ரீ பாலதந்வி குரவே நம:

பாசுரம்:

அலம்புரிந்த நெடுந்தடக்கை அமரர் வேந்தன்*
          அஞ்சிறைப் புள் தனிப்பாகன் அவுணர்க்கு என்றும்*
சலம் புரிந்து அங்கு அருள் இல்லாத் தன்மையாளன் *
           தான் உகந்த ஊரெல்லாம் தன் தாள் பாடி*
நிலம் பரந்து வரும் கலுழிப் பெண்ணை ஈர்த்த*
           நெடுவேய்கள் படுமுத்த முந்த உந்தி*
புலம் பரந்து பொன் விளைக்கும் பொய்கை வேலிப்*
          பூங்கோவலூர் தொழுதும் போது நெஞ்சே!

பாசுர அர்த்தம்:
ஐந்தாம் பாசுரத்தில் திரிவிக்கிரம அவதார விசேஷத்தை அனுபவித்தார் ஆழ்வார். அனுபவத்தோடு மட்டும் அல்லது திரிவிக்கிரம அவதாரமானது என்றோ நடந்த அவதாரமாயிட்ரே நாம் கண்களால் கண்டு அனுபவிக்க முடியாமல் போனதே என்று வருந்தியிருக்க அடியாருக்கு எளியவனான எம்பெருமானும் ஆழ்வீர் அவதார காலத்துக்கு பிற்பட்டோரும் கண்டு அனுபவிக்க வேணும் என்பதற்காக அன்றோ நாம் திருக்கோவலூரில் சந்நிதி பண்ணி இருப்பது; என்று உலகளந்த திருக்கோலத்திலே சேவை சாதிக்கும் திருக்கோவலூரை காட்டிக் கொடுத்தானாம் ஆழ்வாருக்கு.
போதும் போதும் என்று சொன்னாலும் அபாரமாக அள்ளி அள்ளி கொடுக்க வல்ல பெரிய கையை உடையவனும், நித்ய சூரிகளுக்குத் தலைவனும், அழகிய சிறகை உடைய பெரிய திருவடிக்குப் பாகனும், அசுரப் பிரக்ருதிகள் பக்கல் சீற்றம் கொண்டு அவர்கள் விஷயத்தில் எப்போதும் சீற்றத்துடன் இருப்பவனும்(அஹங்கார மமகாரங்களோடு கூடினவர்களாய் பகவத் பக்தியிலே பகை உள்ளவர்களை அசுரப் பிரக்ருதிகள் என்று சொல்லப் படுகிறார்கள்) இப்படி எம்பெருமான் உகந்து எழுந்தருளி இருக்கும் ஊர்களை எல்லாம் பாடிக்கொண்டு, பெண்ணை ஆறு என்னும் பெண்மணி திருக்கோவலூர் ஆயனாரை அனுபவிக்கப் போகிறோம் என்ற சந்தோஷ மிகுதியாலே கரையையும் தாண்டி குடியிருப்பு பகுதிகளில் உள்புகுந்து, வெள்ளத்தால் கொண்டு வரப்பட்ட பெரிய மூங்கில்களிலிருந்து உண்டாகிற முத்துக்களை வயலிலே கொண்டு தள்ள, உழவர்களும் அவை தம்முடைய பயிர்களுக்கு களை என்று தள்ள, அப்படித் தள்ளியும் தடுக்க முடியாத படிக்கு வயல்களில் பறந்ததாம் முத்துக்கள்.இப்படி வயல்களிலே பொன் போன்ற நெற்ப்பயிர்கள் விளையப்  பெற்ற பூங்கோவலூரை சேவிப்போம் நெஞ்சே வா! என்று மங்களாசாசனம்.
 இந்த உரையில் குற்றம் குறை இருக்குமாயின் அடியேனைத் திருத்திப் பணிகொள்ள பிரார்த்திக்கிறேன்.
தாசானு தாசன் 
இராமானுஜ சிஷ்யன்.

No comments: