திருக்கோவலூர்

ஆழ்வார்களால் மங்களாசாசனம் பண்ணப்பட்ட முதல் திவ்யதேசம் திருக்கோவலூர்

Thursday, May 24, 2012

முதல் ஆழ்வார்கள் வைபவச் சுருக்கம்

ஸ்ரீ:
ஸ்ரீமதே இராமானுஜாய நம:
ஸ்ரீமத் வரவர முநயே: 
ஸ்ரீ பாலதந்வி மஹா குரவே நம:

ஸ்ரீ வைகுண்ட நிகேதனும்அவாப்தசமச்த காமனுமான ஸ்ரியப்பதியான எம்பெருமான்இருள் தருமா ஞாலத்தே இருளில் 
மூழ்கிக் கிடக்கும் சம்சாரிகளை ரக்ஷிப்பதர்க்காகஆழ்வார்களைக் கொண்டு திருத்திப் பணிகொள்ள திருவுள்ளம் கொண்டு "ஸ்ரீவத்ச கௌஸ்துப வைஜயந்தி வனமாலைகளையும், ஸ்ரீ பஞ்சாயுத ஆழ்வார்களையும், அனந்த கருட விஸ்வக்சேனரையும்" பார்த்து நீங்கள் சென்று லீலா விபூதியிலே அவதரித்து சம்சாரி சேதனர்களை உஜ்ஜெவிக்கப் பண்ண வேணும் என்று
நியமித்துஎம்பெருமானும் அவர்களுக்கு மயர்வற மதிநலம் அருளிதிராவிட வேத ரூப திவ்யப் பிரபந்த பாசுரங்களை
ஆழ்வார்களைக் கொண்டு பிரகாசிப்பித்தது அருளினான்.  

ஆழ்வார்கள் என்பதற்கு, அவர்களும் பக்தியிலே ஆழ்ந்ததோடு மட்டுமல்லாது மற்ற எல்லோரையும் பக்தியிலே
ஆழ்த்துபவர்கள் என்று பொருள். முதல் ஆழ்வார்கள் மூவர். பொய்கை ஆழ்வார், பூதத்தாழ்வார் மற்றும் பேயாழ்வார். முதல் ஆழ்வார்கள் மூவருள் ப்ரதமம் பொய்கை ஆழ்வார். பொய்கை ஆழ்வார் "கல்லுயர்ந்த நெடுமதிள் சூழ் கச்சிக்கு அருகிலுள்ள கால் நிலம் தோய்ந்து விண்ணோர் தொழும்  கண்ணன் வெக்காவில் பொற்றாமரைப் பொய்கையிலே" காஞ்சநபத்ம கர்பத்திலே ஐப்பசி மாதம் திருவோண நக்ஷத்திரத்திலே ஸ்ரீ பாஞ்சஜன்யத்தின் அம்சமாக திருவவதாரம் பண்ணினார்.
பூதத்தாழ்வார் கடல்மல்லைத்தலசயனம் என்று மங்களாசாசனம் பண்ணப்பட்ட திருக்கடல்மல்லையிலே மாதவிப் பூவிலே ஐப்பசி மாதத்தில் அவிட்ட நக்ஷத்திரத்தில் ஸ்ரீ கௌமோதகிகதாம்சராய் அவதரித்தார். பேயாழ்வார் தேனமர்சோலை மாடமாமயிலை ஆதிகேசவ பெருமாள் சந்நிதியில் உள்ள திருக்கிணற்றிலே  உண்டானதொரு செவ்வல்லிப் பூவிலே ஐப்பசி மாதம் சதய நக்ஷத்திரத்திலே ஸ்ரீ நாந்தகத்தின்(நாந்தகம் என்பது ஒரு வகையான வாள்) அம்சமாக அவதரித்தார்.



முதல் ஆழ்வார்கள் அவதரித்த நாட்களின் பெருமையை  மாமுனிகள் தம்முடைய உபதேசரத்தினமாலையிலே
"ஐப்பசியில் ஓணம் அவிட்டம் சதயம் இவை - ஒப்பிலவா நாள்கள் உலகத்தீர் - எப்புவியும் பேசு புகழ்ப்  பொய்கையார் பூதத்தார் பேயாழ்வார் - தேசுடனே தொன்று சிறப்பால்" என்று மங்களாசாசனம் பண்ணுகிறார்.
முதல் ஆழ்வார்கள் பெயர் ஏற்படக் காரணத்தைப் பற்றி பெரிய ஜீயர் சுவாமி உபதேசரத்தினமாலை பிரபந்தத்தில் தெரிவிக்கிறார்.

"மற்றுள்ள ஆழ்வார்களுக்கு முன்னே வந்துதித்து நற்றமிழால் நூல் செய்து நாட்டை உய்த்த பெற்றிமையோர் முதல் ஆழ்வார்கள் என்னும் பெயரிவர்க்கு நின்றதுலகத்தே நிகழ்ந்து" 

அயோநிஜராக திருவவதரித்த இம்மூவரும் எம்பெருமானுடைய இயற்கையான இன்னருளினாலே மயர்வற மதிநலம்
அருளப் பெற்று, "முக்குணத்து இரண்டவை அகற்றி" ராஜச தாமச குணங்களின் கலப்பு இல்லாமல், "ஒன்றினில் ஒன்றி நின்று" சத்வ குணம் மிகுந்தவராய்  ஞான பக்தி வைராக்யங்கள் நிறைந்து சம்சாரிகளோடு ஒட்டாதவர்களாய் இவர்கள் ஒருவரை ஒருவர் அறியாதே தனித்தனியாக வாழ்ந்து வந்த காலத்தில், இவ்வாழ்வார்களைக் கொண்டு ஜகத்தைத் திருத்தவேணும் என்று எம்பெருமான் தானும் திருவுள்ளம் கொண்டு, "சீரேறு மறையாளர் நிறைந்த செல்வத் திருக்கோவலூரிலே" ஒரு திரு இடைகழியிலே யாத்ருச்சிகமாக சந்திக்கச் செய்தான்.

முதலிலே வந்தவர் ஸ்ரீ பொய்கை ஆழ்வார். இவர் மிருகண்டு மகரிஷி ஆஸ்ரமத்தில் ஒருவர் மட்டுமே சயனித்துக் 
கொள்ளக் கூடிய அளவு மட்டுமே இடம் கொண்ட ஒரு சிறிய இடைகழியிலே சயனித்துக் கொண்டிருந்தார். 

சிறிது நேரம் கழிந்த வாரே அவ்விடத்தே ஸ்ரீ பூதத்தாழ்வார் வந்து அங்கு தங்குவதற்கு இடம் வேணும் என்று கேட்க "இருவரும் இருக்கலாமே" என்று நினைத்து அவரை சேவித்து வரவேற்று
எம்பெருமானுடைய திவ்ய கல்யாண குணங்களையும் பற்றி ஒருவருக்கொருவர்  சொல்லிக் கேட்டுக் கொண்டிருக்கையில், அதே இடத்திற்கு ஸ்ரீ பேயாழ்வாரும் வந்து சேர்ந்தார். மூவர் நிற்கலாம் என்ற நோக்கத்துடன் ஸ்ரீ பொய்கையாரும், ஸ்ரீ பூதத்தாரும் ஸ்ரீ பேயாழ்வாரை வரவேற்று உபசரித்து மூவரும் சேர்ந்து
எம்பெருமானுடைய திவ்ய கல்யாண குணங்களை ஒருவருக்கொருவர் சொல்லிக் கேட்டு மகிழ்ந்து நின்றனர்.

இப்படி மூவரும் நின்று கொண்டிருக்கையில் நான்காவதாக எம்பெருமானும் அவ்விடத்தே வந்து நெருக்கத் தொடங்கினானாம்.



இவர்களை நெருக்குபவர் யார் என்று மூவரும் திகைத்து நிற்கையில், முதல் ஆழ்வாரான ஸ்ரீ பொய்கை ஆழ்வார் மறையின் குருத்தின் பொருளையும் செந்தமிழ் தன்னையும் கூட்டி ஒன்றாகத் திரித்து திருவிளக்கை ஏற்றி "வையம் தகளியா வார்கடலே நெய்யாக - வெய்ய கதிரோன் விளக்காக - செய்ய சுடராழி யான் அடிக்கே சூட்டினேன் சொல்மாலை - இடராழி நீங்குகவே என்று" தொடங்கி முதல் திருவந்தாதியை மங்களாசாசனம் பண்ணினார்.

ஸ்ரீ பூதாழ்வாரும் இறைவனைக் காணும் இதயத்து இருள் கெட ஞானம் என்றும் நிறை விளக்கு ஏற்றி "அன்பே தகளியா ஆர்வமே நெய்யாக - இன்புருகு சிந்தை இடுதிரியா - நன்புருகி ஞானச் சுடர் விளக்கேற்றினேன் நாரணர்க்கு - ஞானத் தமிழ் புரிந்த நான்"என்று தொடங்கி இரண்டாம் திருவந்தாதியைப் மங்களாசாசனம் பண்ணினார்.

இவர்கள் இருவரும் ஏற்றிய திருவிளக்காலே மன்னிய பேரிருளானது மாண்டு போக, கோவலுள் மாமலரால் தன்னொடு மாயனைக் கண்டு, "திருக்கண்டேன் பொன்மேனி கண்டேன் - திகழும் அருக்கண் அணிநிறமும் கண்டேன் - செருக்கிளரும் பொன் ஆழி கண்டேன் புரிசங்கம் கைக்கண்டேன் - என்னாழி வண்ணன் பால் இன்று" என்று தொடங்கி மூன்றாம் திருவந்தாதி பாசுரங்களை மங்களாசாசனம் பண்ணினார்.  

மூவரும் திருக்கோவலூர் ஆயனிடம் விடை பெற்றுக் கொண்டுதிவ்யதேச யாத்திரைகள் சென்றுஅந்திம காலத்தில் மீண்டும் திருக்கோவலூர் வந்து அடைந்து திருநாட்டுக்கு எழுந்தருளினார்களாம்.
குறை இருக்குமாயின் அடியேனை திருத்திப் பணிகொள்ள பிரார்த்திக்கிறேன்.

தாசானு தாசன்

இராமானுஜ சிஷ்யன்




Monday, May 7, 2012

திருக்கோவலூர் திருக்கோவில்

                                          
திருக்கோவலூர் திவ்ய க்ஷேத்திரத்திற்கு நான்கு புறமும் கோபுரங்கள் உண்டு. அக்கோபுரங்களில் கிழக்கு வாசல் கோபுரம் 
மிகவும் உயரமானதுஒரு நூற்று தொன்னூற்று ஐந்து அடி உயரம் கொண்டது ஆகும். திருக்கோவிலுக்கு உள்ளே சென்று த்வஜச்தம்பத்தை சேவித்து நிற்கும் போதே க்ஷேத்ரபாலனான மூலவர் ஸ்ரீ வேணுகோபாலனையும் உத்சவர் ஸ்ரீ ராஜகோபலனையும் சேவிக்கலாம். இந்த சந்நித்திக்கு போகும் வழியிலே வாகன மண்டபம் உள்ளது. ஆவணி மாதத்தில் பத்து நாட்கள் பிரம்மோத்சவம் நடைபெறுகிறது.

ஸ்ரீ வேணுகோபாலனை சேவித்துக் கொண்டு வெளியே வந்தால் இச்சந்நிதிக்கு நேராக கண்ணாடி அரை உள்ளது. கண்ணாடி அறைக்கு இடது பக்கத்தில் திருமடப்பள்ளியும் வலப்பக்கத்தில் சிறிது தூரம் நடந்தால் தாயார் சந்நிதியும் உள்ளது. தாயார் சந்நித்திக்கு போகும் வழியில் ஆழ்வார்களின் மூலவர் சந்நிதி, யாகசாலை,அஞ்சலி ஆஞ்சநேயர் சந்நிதி, மற்றும் மண்டபங்களின் அழகிய வடிவமைப்பு ஆகியவை சேவிக்கலாம்.

மூலவர் தாயார் திருநாமம்: ஸ்ரீ பூங்கோவல் நாச்சியார்.
உத்சவர் தாயார் திருநாமம்: ஸ்ரீ புஷ்பவல்லி நாச்சியார்.



தாயார் சந்நித்திக்கு இடது புறத்தில் ஸ்ரீ சக்ரத்தாழ்வாரின் சந்நிதி உள்ளது. தாயார் சந்நிதியை பிரதட்சிணம் பண்ணி வந்தோமே ஆனால் ஸ்ரீ சக்ரதாழ்வனின் சந்நிதியை சேவித்துக்கொண்டு மேற்கு வாசல் கோபுரத்தையும் காட்டு ராமர் சன்னிதியையும் சேவிக்கலாம்.


பெருமாள் சந்நித்திக்குச் செல்ல தாயார் சந்நிதியை சேவித்துக் கொண்டு திருமடைப்பள்ளி வரை திரும்பி வந்து இடப்பக்கம் திரும்ப வேணும். ஸ்ரீ ஆயனார் சந்நிதிக்கு போகும் வழியிலே இரகசிய க்ரந்தங்களுக்காகவே திரு அவதரித்த ஸ்ரீ பிள்ளை உலகாரியனின் சந்நிந்தியை சேவிக்கலாம். பின்பு த்வார பாலகர்களை சேவித்துக் கொண்டு உள்ளே செல்லும் போது இடப்பக்கத்தில் விந்திய மலையில் இருந்து எழுந்தருளின ஸ்ரீவிஷ்ணு துர்க்கை சந்நிதி உள்ளது. வேறு எந்த திவ்யதேசத்திலும் ஸ்ரீ விஷ்ணு துர்க்கை சந்நிதி இருப்பது அரிது. விந்திய மலையில் இருந்து காவல் தெய்வமாக இங்கு எழுந்தருளி இருப்பதாக புராண வாக்யங்கள் தெரிவிக்கிறது.

ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் "கற்புடைய மடக்கணி காவல் பூண்ட...பூங்கோவலூர் தொழுதும் போது நெஞ்சே" என்று ஸ்ரீ விஷ்ணு துர்கையையும் சேர்த்தே மங்களாசாசனம் பண்ணுகிறார். இது மற்றொரு சிறப்பு ஆகும். ஸ்ரீ விஷ்ணுதுர்க்கை சந்நித்திக்கு எதிராக உள்ளது ஆழ்வார்களின் உத்சவ மூர்த்தி சந்நிதி.

ஆழ்வார்களின் திருமேனியை சேவித்துக் கொண்டு மேலே உள்ளே செல்ல ஸ்ரீ திரிவிக்கிரம பெருமாளையும், இடைகழி ஆயனான ஸ்ரீ தேஹளீச எம்பெருமானையும் சேவிக்கலாம். மூலவர் சந்நிதி அமைந்த இடமே மிருகண்டு மகரிஷி ஆஷ்ரமம் ஆகும்.

ஸ்ரீ திரிவிக்கிரம எம்பெருமான் இடது திருக்காலால் பூமியில் நின்ற படியும், தனது வலத் திருக்காலை உலகளக்க மேலே உயர்த்திய படியும் சேவை சாதிக்கிறார். இந்த திவ்யதேசத்தைத் தவிர அனைத்து திவ்யதேசங்களிலும் த்ரிவிக்ரம எம்பெருமான் இடது திருக்காலை உயர்த்திய படியே தான் சேவை சாதிக்கிறான். இந்த ஒரு திவ்யதேசத்தில் மட்டும் தான் வலது திருக்காலை உயர்த்தியபடி சேவை சாதிக்கிறான். மேலும் மேல் உலகத்தை ஒரு திருவடியாலும், கீழ் உலகத்தை மற்றொரு திருவடியாலும் அளந்த பின்பு மற்றொரு அடிக்கு எங்கே இடம் என்று மகாபலியிடம் கேட்ட படிக்கு ஸ்ரீ திரிவிக்கிரம எம்பெருமானின் வலத்திருக்கையின் ஆள் காட்டி விரல் இருக்கும். அதையும் அற்புதாமாக சேவிக்கலாம். மேலே உயர்த்திய திருவடியை நான்முகக் கடவுளான பிரம்மா ஆராதிக்கிறார். எம்பெருமானுக்கு வலக்கையில் சங்கும் இடது கையில் சக்கரமும் இருக்கும் - சங்க நாதம் பண்ணுவதாக ஐதிகம். இதை வேறு ஒரு திவ்யதேசத்திலும் காண இயலாது.

மற்ற அனைத்து திவ்யதேசங்களிலும் வலக்கையில் சக்ரத்தாழ்வானும்இடக்கையில் சங்கமும் இருக்கும். மகாபலி சக்ரவர்த்தியின் குமாரர் நமுசி மகாராஜா எம்பெருமானுக்கு பாத பூஜை பண்ணுகிறார்.

மேலும் மூலவருடன் முதல் ஆழ்வார்களான  பொய்கையார், பூதத்தார், பேயார் மற்றும் மஹா லக்ஷ்மி, பிரஹ்லாதன், மிருகண்டு மகரிஷி, மிருகண்டு மகரிஷியின் பத்னி, அசுர குரு சுக்ராசார்யர், ஆகியோரையும் மூலவர் சந்நிதியிலே சேவிக்கலாம். எம்பெருமானுடைய புன்சிரிப்பும், சாலக்ராம மாலையும், தசாவதார ஒட்டியானமும், தங்க கவசங்களும், தங்கக் கிரீடமும்அழகான திருமண்காப்பும்சேவிக்க வருவோர் எல்லோரையும் "என் அமுதினைக் கண்ட கண்கள் மற்றொன்றினைக் காணாவே" என்று "வாயினால் பாடி மனத்தினால் சிந்திக்க வைக்கும்".
மூலவர் சந்நிதியுள் அனந்தன் மற்றும் வாசுகி ஆகியோரை சேவிக்கலாம். மேலும் மூலவர் சந்நிதிக்கு பின்புறமாக ஸ்ரீ வாமனின் சந்நிதி அமைந்துள்ளது. ஸ்ரீ வாமனனுக்கு வேறு ஒரு திவ்யதேசத்திலும் சந்நிதி இருப்பதாக தெரியவில்லை. மாதம் தோறும் திருவோண நக்ஷத்திரம் அன்று ஸ்ரீ வாமனனுக்கு திருமஞ்சனம் நடைபெறுகிறது.
பெருமாள் சந்நிதி பிரஹாரத்தில் அமைந்துள்ள சந்நிதிகள் பின்வருமாறு:

வீர ஆஞ்சநேயர் சந்நிதி, ஸ்ரீ லக்ஷ்மி நாராயணன் சந்நிதி, ஸ்ரீ லக்ஷ்மி வராஹன் சந்நிதி, ஸ்ரீ நருசிம்மன், ஸ்ரீ மத்ஸ்ய மற்றும் ஸ்ரீ கூர்ம  ஆகிய விபவ அவதாரங்களின்  மூலவர் சந்நிதி, ஸ்ரீ ஆண்டாள் சந்நிதி, ஸ்ரீ ஆளவந்தார், ஸ்ரீ திருக்கோட்டியூர் நம்பி மற்றும் ஸ்வாமி எம்பெருமானார் ஆகியோர்களின் மூலத் திருமேனி ஒரே சந்நிதியில், ஸ்ரீ ஆண்டாள் சந்நிதி, படைத் தளபதியான ஸ்ரீ சேனை முதலியார் சந்நிதி மற்றும் ஸ்ரீ மணவாள மாமுனிகள் சந்நிதி ஆகியவை ஆகும். ஸ்ரீ சேனை முதலிகளின் சந்நிதிக்கு பின்பாக நின்று கொண்டு விமானத்தை சேவித்துக் கொள்ளலாம். விமானத்தின் திருநாமம் ஸ்ரீ கர விமானம்.

எம்பெருமானார் சந்நிதிக்கு முன்பாக அமைந்துள்ளது திருப்பரமபதவாசல் மற்றும் ஸ்ரீ ஏகாதசி மண்டபம். இந்த மண்டப்பத்தில் தான் இராப்பத்து உத்சவம், வசந்தோத்சவம் ஆகியவை நடைபெறும். இந்த மண்டபத்தில் ஸ்ரீ வரதராஜப் பெருமாளுக்கு சந்நிதி உண்டு.

இந்தத் திருத்தலத்தில் தசாவதாரங்களில் பரசுராம அவதாரம், பலராம அவதாரம் மற்றும் கல்கி அவதாரம் ஆகியவை தவிர்த்து மற்றுமுள்ள ஏழு அவதாரங்களையும் சேவிக்கலாம்.

ஸ்தல வ்ருக்ஷம்: புன்னை - ஏகாதசி மண்டபத்துக்கு முன்பாக உள்ளது. 

தாசானு தாசன்


இராமானுஜ சிஷ்யன்