திருக்கோவலூர்

ஆழ்வார்களால் மங்களாசாசனம் பண்ணப்பட்ட முதல் திவ்யதேசம் திருக்கோவலூர்

Tuesday, August 14, 2012

திருமங்கை ஆழ்வார் மங்களாசாசனம்: திருக்கோவலூர் திருத்தலத்திற்காக பெரிய திருமொழி இரண்டாம் பத்து பத்தாம் திருமொழி.


ஸ்ரீ:
ஸ்ரீமதே இராமானுஜாய நம:
ஸ்ரீமத் வரவர முநயே நம:
ஸ்ரீ பாலதந்வி மகாகுரவே நம:
திருக்கோவலூர் ஸ்ரீமத் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் 

எம்பெருமானிடம் வாளைக் காட்டி மந்திரம் பெற்றுக் கொண்டு, அஞ்ஞான இருள் நீங்கி தத்துவ ஞானம் கிடைக்கப் பெற்று எம்பெருமானை கண்ணாரக் கண்டு சேவித்து, பரிபூர்ணமாக அனுபவித்து, அந்த அனுபவத்தால் ஆசுகவி, சித்திரகவி, மதுரகவி மற்றும் விச்தாரக்கவி என்னும் நால்வகை கவிகளையும் பாடவல்ல பாண்டித்யம் உடையவராய் - வேதத்துக்கு ஆறங்கம் போலே - வேதம் தமிழ் செய்த மாறன் சடகோபனான ஸ்ரீ நம்மாழ்வார் ப்ரசாதித்தருளின நான்கு பிரபந்தங்களுக்கும் ஆறு அங்கங்களாக அமையும்படிக்கு பெரியதிருமொழி, திருக்குறுந்தாண்டகம், திருவெழுகூற்றிருக்கை, சிறிய திருமடல், பெரிய திருமடல், திருநெடுந்தாண்டகம் என்னும் ஆறு திவ்யப்ரபந்தங்களை திருவாய்மலர்ந்தருளினார்

முதல் திருமொழியிலே திரு அஷ்டாக்ஷர மந்திரத்தின் வைபவத்தைப் பாசுரமாக மங்களாசாசனம் பண்ணி, பிறகு அர்ச்சாவதாரத்திலே மிகவும் ஈடுபட்டு திவ்யதேச யாத்திரையாக பல திவ்யதேசங்களுக்குச் சென்று அவ்வெம்பெருமானுக்கு மங்களாசாசனம் பண்ணுகிறார். முதலிலே வடநாட்டு திவ்யதேசங்களான திருப்ப்ரிதி தொடங்கி  வதரி, சாளக்ராமம், நைமிசாரண்யம், சிங்கவேள்குன்றம், திருவேங்கடம் மற்றும் தொண்டைமண்டலத்திலுள்ள எவ்வுள்(திருவள்ளூர்), திருநின்றவூர், திருவல்லிக்கேணி, திருநீர்மலை திருவிடந்தை, அட்டபுயகரம், பரமேச்சுர விண்ணகரம் மற்றும் திருக்கடல்மல்லை ஆகிய திவ்யதேசங்களில்  மங்களாசாசனம் பண்ணிவிட்டு, திராவிட வேதம் அவதார ஸ்தலமும்நடுநாட்டு திருப்பதிகளில் ஒன்றானதும், பஞ்ச க்ரிஷ்ணாரண்ய க்ஷேத்ரங்களில் ஒன்றானதும், முதல் ஆழ்வார்கள் ஒன்று கூடி பாசுரம் பாடின திருத்தலமான திருக்கோவலூர் என்னும் க்ஷேத்ரத்திலே நித்யசூரிகளான அனந்தன் வாசுகி மற்றும் முதல் ஆழ்வார்களோடே சேவை சாதிக்கும் வையம் அளந்த எம்பெருமானுக்கு பத்து பாசுரம் கொண்டு மங்களாசாசனம் பண்ணுகிறார்.

கோபாலன் என்று அழைக்கப் படுகிற ஆயனார் உகந்து எழுந்தருளி இருக்கும் திவ்ய தலம் இந்த திவ்யக்ஷேத்ரம். அதனாலே இந்த திருத்தலத்திற்கு திருக்கோவலூர் என்ற திருநாமம் ஏற்பட்டது

குறிப்பு: கோபால என்ற வடசொல்லே கோவல் என்றாயிற்று என்று வடமொழி வல்லார்கள் பணிப்பர்

இந்த திருத்தலத்தின் பாசுரங்கள் மற்றும் அப்பாசுரத்தின் எளிமையான அர்த்தம் ஆகியவற்றை அடுத்தபதிப்பில் இருந்து அனுபவிப்போம்

அடியேனுடைய சிற்றறிவுக்கு எட்டின அளவிலே எழுதியுள்ளேன். குறை இருக்குமாயின் திருத்திப் பணிகொள்ள பிரார்த்திக்கிறேன்

தாசானு தாசன்

இராமானுஜ சிஷ்யன்