ஸ்ரீ:
ஸ்ரீமதே இராமானுஜாய நம:
ஸ்ரீமத் வரவர முநயே:
ஸ்ரீ பாலதந்வி மஹா குரவே நம:
ஸ்ரீ வைகுண்ட நிகேதனும், அவாப்தசமச்த காமனுமான ஸ்ரியப்பதியான எம்பெருமான், இருள் தருமா ஞாலத்தே இருளில்
மூழ்கிக் கிடக்கும் சம்சாரிகளை ரக்ஷிப்பதர்க்காக, ஆழ்வார்களைக் கொண்டு திருத்திப் பணிகொள்ள திருவுள்ளம் கொண்டு "ஸ்ரீவத்ச கௌஸ்துப வைஜயந்தி வனமாலைகளையும், ஸ்ரீ பஞ்சாயுத ஆழ்வார்களையும், அனந்த கருட விஸ்வக்சேனரையும்" பார்த்து நீங்கள் சென்று லீலா விபூதியிலே அவதரித்து சம்சாரி சேதனர்களை உஜ்ஜெவிக்கப் பண்ண வேணும் என்று
நியமித்து, எம்பெருமானும் அவர்களுக்கு மயர்வற மதிநலம் அருளி, திராவிட வேத ரூப திவ்யப் பிரபந்த பாசுரங்களை
ஆழ்வார்களைக் கொண்டு பிரகாசிப்பித்தது அருளினான்.
ஆழ்வார்கள் என்பதற்கு, அவர்களும் பக்தியிலே ஆழ்ந்ததோடு மட்டுமல்லாது மற்ற எல்லோரையும் பக்தியிலே
ஆழ்த்துபவர்கள் என்று பொருள். முதல் ஆழ்வார்கள் மூவர். பொய்கை ஆழ்வார், பூதத்தாழ்வார் மற்றும் பேயாழ்வார். முதல் ஆழ்வார்கள் மூவருள் ப்ரதமம் பொய்கை ஆழ்வார். பொய்கை ஆழ்வார் "கல்லுயர்ந்த நெடுமதிள் சூழ் கச்சிக்கு அருகிலுள்ள கால் நிலம் தோய்ந்து விண்ணோர் தொழும் கண்ணன் வெக்காவில் பொற்றாமரைப் பொய்கையிலே" காஞ்சநபத்ம கர்பத்திலே ஐப்பசி மாதம் திருவோண நக்ஷத்திரத்திலே ஸ்ரீ பாஞ்சஜன்யத்தின் அம்சமாக திருவவதாரம் பண்ணினார்.
பூதத்தாழ்வார் கடல்மல்லைத்தலசயனம் என்று மங்களாசாசனம் பண்ணப்பட்ட திருக்கடல்மல்லையிலே மாதவிப் பூவிலே ஐப்பசி மாதத்தில் அவிட்ட நக்ஷத்திரத்தில் ஸ்ரீ கௌமோதகிகதாம்சராய் அவதரித்தார். பேயாழ்வார் தேனமர்சோலை மாடமாமயிலை ஆதிகேசவ பெருமாள் சந்நிதியில் உள்ள திருக்கிணற்றிலே உண்டானதொரு செவ்வல்லிப் பூவிலே ஐப்பசி மாதம் சதய நக்ஷத்திரத்திலே ஸ்ரீ நாந்தகத்தின்(நாந்தகம் என்பது ஒரு வகையான வாள்) அம்சமாக அவதரித்தார். முதல் ஆழ்வார்கள் அவதரித்த நாட்களின் பெருமையை மாமுனிகள் தம்முடைய உபதேசரத்தினமாலையிலே
"ஐப்பசியில் ஓணம் அவிட்டம் சதயம் இவை - ஒப்பிலவா நாள்கள் உலகத்தீர் - எப்புவியும் பேசு புகழ்ப் பொய்கையார் பூதத்தார் பேயாழ்வார் - தேசுடனே தொன்று சிறப்பால்" என்று மங்களாசாசனம் பண்ணுகிறார்.
முதல் ஆழ்வார்கள் பெயர் ஏற்படக் காரணத்தைப் பற்றி பெரிய ஜீயர் சுவாமி உபதேசரத்தினமாலை பிரபந்தத்தில் தெரிவிக்கிறார்.
"மற்றுள்ள ஆழ்வார்களுக்கு முன்னே வந்துதித்து நற்றமிழால் நூல் செய்து நாட்டை உய்த்த பெற்றிமையோர் முதல் ஆழ்வார்கள் என்னும் பெயரிவர்க்கு நின்றதுலகத்தே நிகழ்ந்து"
அயோநிஜராக திருவவதரித்த இம்மூவரும் எம்பெருமானுடைய இயற்கையான இன்னருளினாலே மயர்வற மதிநலம்
அருளப் பெற்று, "முக்குணத்து இரண்டவை அகற்றி" ராஜச தாமச குணங்களின் கலப்பு இல்லாமல், "ஒன்றினில் ஒன்றி நின்று" சத்வ குணம் மிகுந்தவராய் ஞான பக்தி வைராக்யங்கள் நிறைந்து சம்சாரிகளோடு ஒட்டாதவர்களாய் இவர்கள் ஒருவரை ஒருவர் அறியாதே தனித்தனியாக வாழ்ந்து வந்த காலத்தில், இவ்வாழ்வார்களைக் கொண்டு ஜகத்தைத் திருத்தவேணும் என்று எம்பெருமான் தானும் திருவுள்ளம் கொண்டு, "சீரேறு மறையாளர் நிறைந்த செல்வத் திருக்கோவலூரிலே" ஒரு திரு இடைகழியிலே யாத்ருச்சிகமாக சந்திக்கச் செய்தான்.
முதலிலே வந்தவர் ஸ்ரீ பொய்கை ஆழ்வார். இவர் மிருகண்டு மகரிஷி ஆஸ்ரமத்தில் ஒருவர் மட்டுமே சயனித்துக்
கொள்ளக் கூடிய அளவு மட்டுமே இடம் கொண்ட ஒரு சிறிய இடைகழியிலே சயனித்துக் கொண்டிருந்தார்.
சிறிது நேரம் கழிந்த வாரே அவ்விடத்தே ஸ்ரீ பூதத்தாழ்வார் வந்து அங்கு தங்குவதற்கு இடம் வேணும் என்று கேட்க "இருவரும் இருக்கலாமே" என்று நினைத்து அவரை சேவித்து வரவேற்று
எம்பெருமானுடைய திவ்ய கல்யாண குணங்களையும் பற்றி ஒருவருக்கொருவர் சொல்லிக் கேட்டுக் கொண்டிருக்கையில், அதே இடத்திற்கு ஸ்ரீ பேயாழ்வாரும் வந்து சேர்ந்தார். மூவர் நிற்கலாம் என்ற நோக்கத்துடன் ஸ்ரீ பொய்கையாரும், ஸ்ரீ பூதத்தாரும் ஸ்ரீ பேயாழ்வாரை வரவேற்று உபசரித்து மூவரும் சேர்ந்து
எம்பெருமானுடைய திவ்ய கல்யாண குணங்களை ஒருவருக்கொருவர் சொல்லிக் கேட்டு மகிழ்ந்து நின்றனர்.
இப்படி மூவரும் நின்று கொண்டிருக்கையில் நான்காவதாக எம்பெருமானும் அவ்விடத்தே வந்து நெருக்கத் தொடங்கினானாம்.
இவர்களை நெருக்குபவர் யார் என்று மூவரும் திகைத்து நிற்கையில், முதல் ஆழ்வாரான ஸ்ரீ பொய்கை ஆழ்வார் மறையின் குருத்தின் பொருளையும் செந்தமிழ் தன்னையும் கூட்டி ஒன்றாகத் திரித்து திருவிளக்கை ஏற்றி "வையம் தகளியா வார்கடலே நெய்யாக - வெய்ய கதிரோன் விளக்காக - செய்ய சுடராழி யான் அடிக்கே சூட்டினேன் சொல்மாலை - இடராழி நீங்குகவே என்று" தொடங்கி முதல் திருவந்தாதியை மங்களாசாசனம் பண்ணினார்.
ஸ்ரீ பூதாழ்வாரும் இறைவனைக் காணும் இதயத்து இருள் கெட ஞானம் என்றும் நிறை விளக்கு ஏற்றி "அன்பே தகளியா ஆர்வமே நெய்யாக - இன்புருகு சிந்தை இடுதிரியா - நன்புருகி ஞானச் சுடர் விளக்கேற்றினேன் நாரணர்க்கு - ஞானத் தமிழ் புரிந்த நான்"என்று தொடங்கி இரண்டாம் திருவந்தாதியைப் மங்களாசாசனம் பண்ணினார்.
இவர்கள் இருவரும் ஏற்றிய திருவிளக்காலே மன்னிய பேரிருளானது மாண்டு போக, கோவலுள் மாமலரால் தன்னொடு மாயனைக் கண்டு, "திருக்கண்டேன் பொன்மேனி கண்டேன் - திகழும் அருக்கண் அணிநிறமும் கண்டேன் - செருக்கிளரும் பொன் ஆழி கண்டேன் புரிசங்கம் கைக்கண்டேன் - என்னாழி வண்ணன் பால் இன்று" என்று தொடங்கி மூன்றாம் திருவந்தாதி பாசுரங்களை மங்களாசாசனம் பண்ணினார்.
மூவரும் திருக்கோவலூர் ஆயனிடம் விடை பெற்றுக் கொண்டு, திவ்யதேச யாத்திரைகள் சென்று, அந்திம காலத்தில் மீண்டும் திருக்கோவலூர் வந்து அடைந்து திருநாட்டுக்கு எழுந்தருளினார்களாம்.
குறை இருக்குமாயின் அடியேனை திருத்திப் பணிகொள்ள பிரார்த்திக்கிறேன்.
தாசானு தாசன்
இராமானுஜ சிஷ்யன்