திருக்கோவலூர்

ஆழ்வார்களால் மங்களாசாசனம் பண்ணப்பட்ட முதல் திவ்யதேசம் திருக்கோவலூர்

Tuesday, March 26, 2013

திருநெடுந்தாண்டகம் ஏழாம் பாசுர அர்த்தம்:

ஸ்ரீ:
ஸ்ரீமதே இராமாநுஜாய நம :
ஸ்ரீமத் வரவர முநயே நம :
ஸ்ரீ பாலதந்வி குரவே நம :
பாசுரம்:
வற்புடைய வரை நெடுந்தோள் மன்னர் மாள*
வடிவாய மழுவேந்தி உலகம் ஆண்டு*
வெற்புடைய நெடுங்கடலுள் தனிவேல் உய்த்த*
வேள் முதலா வென்றானூர் விந்தம் மேய *
கற்புடைய மடக்கன்னி காவல் பூண்ட*
கடிபொழில் சூழ் நெடுமறுகில் கமல வேலி*
பொற்புடைய மலை அரையன் பணிய நின்ற*
பூங்கோவலூர் தொழுதும் போது நெஞ்சே*
பாசுர அர்த்தம்:
ஆறாம் பாசுரத்திலே பூங்கோவலூர் தொழுதும் போது நெஞ்சேஎன்று திருக்கோவலூரைத் தொழுகைக்காகத் திருவுள்ளத்தை அழைத்தார். எம்பெருமானும் உலகளந்த திருக்கோலத்திலே சேவை சாதிக்க, எம்பெருமானுடைய திருக்கல்யாண குணங்களை அனுசந்தித்தவாரே இந்த வஸ்துவுக்கு என்ன அவத்யம் ஏற்படுமோ என்று அஞ்சினாராம் ஆழ்வார்.
சக்ரவர்த்தித் திருமகன் சுக்ரீவனுக்கு தம் தோள் வலிமையைக் காட்டிக்கொடுத்தது போலே, திருக்கோவலூர் ஆயனாரும் தம் மிடுக்கையும், காவலுரைப்பையும் ஆழ்வாருக்கு காட்டிக்கொடுக்க, அச்சம் தவிர்த்து தெளியப் பெற்று இப்பசுரத்திலும் பூங்கோவலூர் தொழுதும் போது நெஞ்சே என்று தம் திருவுள்ளத்தை தட்டி எழுப்புகிறாராம்.
வற்புடைய வரை நெடுந்தோள் மன்னர் மாள வடிவாய மழுவேந்திஎன்றது பரசுராம அவதார பரம். உலகமானது என்றது ஸ்ரீராம அவதார பரம். வெற்புடைய நெடுங்கடலுள் தனிவேல் உய்த்த வேள் முதலா வென்றான்என்றது ஸ்ரீ கிருஷ்ணாவதாரத்தின் பாணாசுர விஜயபரம். இவையே ஆழ்வாருடைய அச்சம் தீர்வதற்கு எம்பெருமான் காட்டிக்கொடுத்த மிடுக்குகளாம்.
வெற்புடைய நெடுங்கடலுள் தனிவேல் உய்த்த வேள் முதலா வென்றான்என்றது
முன்னொரு காலத்தில் மலைகள் அனைத்தும் தம் இறகுகளுடன் கூடிப்பரந்து, ஆங்காங்கு உள்ள நகரங்கள் மற்றும் கிராமங்கள் மீது விழுந்து அழித்துக் கொண்டு திரியுங்கால் தேவேந்திரன் வஜ்ராயுதத்தால் மலைகளின் இறகுகளை அருத்தொழிக்க, மைநாகமலை என்ற ஒரு மலை மட்டும் அவனிடம் இருந்து தப்பித்து கடலுக்குள்ளே கிடக்க, தேவ சேனாதிபதியான சுப்பிரமணியன் இதை அறிந்து தனது வேற்படையைச் செலுத்தி அம்மலை நலிந்ததாம். இப்படிப்பட்ட மகாவீரனான சுப்பிரமணியன் போல்வாரையும் பாணாசுர யுத்தத்தின்போது பங்கபடுத்தின விதம் இங்கு அனுசந்திக்கப்படுகிறது.
வேள் என்ற வார்த்தைக்கு மன்மதனைப் போன்று அழகில் சிறந்தவன் என்ற பொருள் ஆகும். வேதம் தமிழ் செய்த மாறன் சடகோபனும், ஆழியெழ என்று தொடங்கும் திருவாய்மொழி பதிகத்திலே நேர் சரிந்தான் கொடிக் கோழி கொண்டான்என்று பாணாசுர வ்ருத்தாந்தத்தை முன்னமே அருளிச்செய்து உள்ளார்.
இப்படி பரசுராமனாகவும், ஸ்ரீராமனாகவும் திருவவதரித்தும், சுப்பிரமணியன் முதலான தேவதைகளை பாணாசுர யுத்தத்திலே தோல்வி அடையச் செய்த எம்பெருமான் எழுந்தருளி இருக்கும் இடமும், விந்திய மலையில் வாழ்ந்த ஸ்ரீ விஷ்ணு துர்கையால் காவல் செய்யப்பெற்றதும், எங்கு பார்த்தாலும் நறுமணம் மிக்க சோலைகளால் திருவீதிகளை உடையதும், சுற்றிலும் தாமரை தடாகங்களை உடையதும், பரம்பரையாக அரசர்களால் ஆச்ரயிக்கப் பட்ட திருக்கோவலூரை மனமே தொழுவோம் வா என்று அழைக்கிறார் ஆழ்வார்.
அடியேனுடைய சிற்றறிவுக்கு எட்டின அளவிலே எழுதியுள்ளேன். அடியேனது உரையில் குற்றம் குறை இருக்குமாயின் அடியேனைத் திருத்திப் பணிகொள்ள பிரார்த்திக்கிறேன்.
தாசானு தாசன்
இராமானுஜ சிஷ்யன்

திருநெடுந்தாண்டகம் ஆறாம் பாசுர அர்த்தம்:

ஸ்ரீ:
ஸ்ரீமதே இராமானுஜாய நம:
ஸ்ரீமத் வரவர முநயே நம:
ஸ்ரீ பாலதந்வி குரவே நம:

பாசுரம்:

அலம்புரிந்த நெடுந்தடக்கை அமரர் வேந்தன்*
          அஞ்சிறைப் புள் தனிப்பாகன் அவுணர்க்கு என்றும்*
சலம் புரிந்து அங்கு அருள் இல்லாத் தன்மையாளன் *
           தான் உகந்த ஊரெல்லாம் தன் தாள் பாடி*
நிலம் பரந்து வரும் கலுழிப் பெண்ணை ஈர்த்த*
           நெடுவேய்கள் படுமுத்த முந்த உந்தி*
புலம் பரந்து பொன் விளைக்கும் பொய்கை வேலிப்*
          பூங்கோவலூர் தொழுதும் போது நெஞ்சே!

பாசுர அர்த்தம்:
ஐந்தாம் பாசுரத்தில் திரிவிக்கிரம அவதார விசேஷத்தை அனுபவித்தார் ஆழ்வார். அனுபவத்தோடு மட்டும் அல்லது திரிவிக்கிரம அவதாரமானது என்றோ நடந்த அவதாரமாயிட்ரே நாம் கண்களால் கண்டு அனுபவிக்க முடியாமல் போனதே என்று வருந்தியிருக்க அடியாருக்கு எளியவனான எம்பெருமானும் ஆழ்வீர் அவதார காலத்துக்கு பிற்பட்டோரும் கண்டு அனுபவிக்க வேணும் என்பதற்காக அன்றோ நாம் திருக்கோவலூரில் சந்நிதி பண்ணி இருப்பது; என்று உலகளந்த திருக்கோலத்திலே சேவை சாதிக்கும் திருக்கோவலூரை காட்டிக் கொடுத்தானாம் ஆழ்வாருக்கு.
போதும் போதும் என்று சொன்னாலும் அபாரமாக அள்ளி அள்ளி கொடுக்க வல்ல பெரிய கையை உடையவனும், நித்ய சூரிகளுக்குத் தலைவனும், அழகிய சிறகை உடைய பெரிய திருவடிக்குப் பாகனும், அசுரப் பிரக்ருதிகள் பக்கல் சீற்றம் கொண்டு அவர்கள் விஷயத்தில் எப்போதும் சீற்றத்துடன் இருப்பவனும்(அஹங்கார மமகாரங்களோடு கூடினவர்களாய் பகவத் பக்தியிலே பகை உள்ளவர்களை அசுரப் பிரக்ருதிகள் என்று சொல்லப் படுகிறார்கள்) இப்படி எம்பெருமான் உகந்து எழுந்தருளி இருக்கும் ஊர்களை எல்லாம் பாடிக்கொண்டு, பெண்ணை ஆறு என்னும் பெண்மணி திருக்கோவலூர் ஆயனாரை அனுபவிக்கப் போகிறோம் என்ற சந்தோஷ மிகுதியாலே கரையையும் தாண்டி குடியிருப்பு பகுதிகளில் உள்புகுந்து, வெள்ளத்தால் கொண்டு வரப்பட்ட பெரிய மூங்கில்களிலிருந்து உண்டாகிற முத்துக்களை வயலிலே கொண்டு தள்ள, உழவர்களும் அவை தம்முடைய பயிர்களுக்கு களை என்று தள்ள, அப்படித் தள்ளியும் தடுக்க முடியாத படிக்கு வயல்களில் பறந்ததாம் முத்துக்கள்.இப்படி வயல்களிலே பொன் போன்ற நெற்ப்பயிர்கள் விளையப்  பெற்ற பூங்கோவலூரை சேவிப்போம் நெஞ்சே வா! என்று மங்களாசாசனம்.
 இந்த உரையில் குற்றம் குறை இருக்குமாயின் அடியேனைத் திருத்திப் பணிகொள்ள பிரார்த்திக்கிறேன்.
தாசானு தாசன் 
இராமானுஜ சிஷ்யன்.

Monday, March 11, 2013

Tirukkovalur Sri Dehaleesa Perumal Brahmothsava Pathrikai









Tirukkovalur Trivikrama Swami Devasthanam
Tirukkovalur Srimath Emberumaanaar Jeeyar Mutt

Tirukkovalur.

Dasanu Dasan

Iramanuja Sishyan