திருக்கோவலூர்

ஆழ்வார்களால் மங்களாசாசனம் பண்ணப்பட்ட முதல் திவ்யதேசம் திருக்கோவலூர்

Thursday, April 26, 2012

திருக்கோவலூர் - ஸ்தல புராண சுருக்கம்:

இந்தத் திருக்கோயிலின் ஸ்தல வரலாறு பாத்ம புராணத்தில் உள்ளது.  மகா பக்தனான ப்ரஹ்லாத ஆழ்வானின் திருப்பேரன் மகாபலி சக்கரவர்த்தி. தர்மநெறி தவறாமல் தான தர்மங்கள் பண்ணுவதில் மிகவும் சிறந்தவன். மகாபலியின் ஆசார்யன் அசுரகுருவான சுக்ராசார்யார் ஆவார்.

ஒரு சமயம் மகாபலி இந்திர லோகத்தை தன் ஆளுமைக்கு உட்படுத்த எண்ணம் கொண்டு இந்திரனிடம் போர் புரிய வரும் சமயத்தில் இந்திரன் எம்பெருமானை சரணடையஎம்பெருமான் தானும் இந்திரனுக்கு அபயம் அளிக்க மகா பதிவ்ரதையான அதிதி தேவிக்கும்காஷ்யப முனிவருக்கும் (இளையகுமாரனாக) வாமனனாக அவதரிக்கிறார்.

உபநயம் முடிந்த காலத்தே ஸ்ரீ வாமன மூர்த்தி பலியினுடைய மாளிகைக்கு செல்ல, மகாபலியும் வாமனனின் தேஜஸ்சைக் கண்டு அதிசயித்து, அவருக்கு வேண்டிய உபசாரங்களைப் பண்ணி கௌரவித்து, தன்னை நாடி வந்தோருக்கு இல்லை என்று கூறாமல் அனைத்தையும் கொடுக்கும் குணம் கொண்டவனான மகாபலியும் தேவரீருக்கு வேண்டியவை அனைத்தையும் கொடுக்க நினைக்கிறேன், அவசியம் கேட்டுப் பெறவேணும் என்று விண்ணப்பித்தானாம்.

மகானுபாவரே! அடியேனோ பிரமச்சாரி - தேவரீர் தருவதாகச் சொன்ன பொருட்களை வைத்துக்கொண்டு அடியேனுக்கு ஒரு பிரயோஜனமும் இல்லை. அதனால் அடியேனுக்கு வேண்டியது - "என்னுடைய  திருவடியால் யான் அளப்ப மூவடி மண் வேண்டும்" என்று ஸ்ரீ வாமன மூர்த்தி தெரிவித்தாராம்.
மகாபலியும், வந்திருப்பவர் சாக்ஷாத் எம்பெருமான் என்பதை உணராமல், தானம் கொடுக்க முன்வந்தானாம்.

இதை அறிந்த அசுர குருவான சுக்ராசார்யார், மகாபலியிடம் வந்திருப்பவர் சாமான்ய மனிதர் அல்ல - ஸாக்ஷாத் எம்பெருமானே. அதனால் தானம் கொடுக்க வேண்டாம் என்று தடுக்க, மகாபலியோ என்னே பாக்கியம் எம்பெருமானுக்கே அன்றோ, மூவடி மண்தானே கேட்கிறார் - எடுத்துக்கொள்ளட்டுமே என்று குரு சொன்ன வார்த்தைகளை ஆமோதிக்காமல், தானம் கொடுக்க கமண்டலு ஜலத்தை எடுத்து தாரை வார்க்க நினைத்த போது, சுக்ராசார்யார் மகாபலியின் இந்தச் செயலைத் தடுக்க நினைத்து ஒரு வண்டாக உருவெடுத்து கமன்டலுவின் நீர் நுழைவு வாயிலில் அமர்ந்து கொண்டு நீரை கமன்டலுவின் வாயிலில் இருந்து விழவிடாமல் தடுக்கிராராம்.

இதனை அறிந்த எம்பெருமான், தர்ப்பை என்று சொல்லகூடிய ஒரு வகையான புல்லின் நுனியால் அவ்வண்டின் கண்களை குத்திவிட வண்டானது கீழே விழுந்தாயிற்று(சுக்கிரன் கண்ணை துரும்பால் கிளறிய).
மகாபலி உடனே மூன்று முறை கொடுத்தோம் கொடுத்தோம் கொடுத்தோம் என்று சொல்லி கமண்டலு நீரை கீழே விட, எம்பெருமானும் பெற்றுக் கொண்டு அதே தருணத்தில் ஓங்கி உலகலன்த்த உத்தமனாக வானளவு உயர்ந்து மேல் லோகங்களை ஒரு அடியாலும், கீழ் லோகங்களை மற்றொரு அடியாலும் அளந்து மற்ற அடிக்கு எங்கே இடம் என்று மகாபலியிடம் கேட்க, மகாபலி தன் சிரசைக் காட்ட, எம்பெருமான் மகாபலியின் தலையில் தம் திருவடியை வைத்து மகாபலியை கீழ்லோகமான பாதாள லோகத்துக்கு தள்ளி விட்டானாம்.

இந்த அவதாரம் நடந்த போது, மிருகண்டு மகரிஷி அவ்விடத்தில் இல்லை. இந்த நிகழ்வைப் பற்றி அவர் கேள்வி பட்ட போது, எம்பெருமானை சேவிக்க முடியாமல் போன காரணத்தால் மிகவும் வருந்தினார். எம்பெருமானை இதே திருக்கோலத்தில் சேவிக்க திருவுள்ளம் கொண்ட ரிஷி, எம்பெருமானை நோக்கி கடும் தவம் புரிய நினைக்கிறார். ஒரு நாள் பிரஜாபதியான பிரம்மா திரிவிக்கிரம எம்பெருமானை சேவிக்கப் பண்ண க்ரிஷ்ணபத்ரா நதிக்கரைக்கு செல்ல வேணும் என்று இவரை பிரார்த்திக்கிறார்.

ஒரு சமயம் வயதான ஒரு பெரியவரும், தர்மபத்நியுமாக மிருகண்டு மகாரிஷியுடைய குடிலுக்கு வந்து, எங்களுக்கு மிகவும் பசியாக இருக்கிறது - பசியாற உணவளிக்க பிரார்த்திக்கிறோம் என்று பிரார்த்தித்தனர். மிருகண்டு ரிஷியும் பத்நியிடம் தெரிவிக்க, அவள் எம்பெருமானை பிரார்த்தித்து அவர்களுக்கு வேண்டியவற்றைப் பெற்று அவர்களால் முடிந்த அளவு சிறப்பான முறையில் உபசரித்து அருளினார். சிறிது நேரத்தில் அந்த முதியவரும் அவருடைய பத்னியும் சங்கு சக்ர தாரியாக பெருமாளும் தாயாருமாக சேவை சாதிக்க - வந்திருக்கும் இவர்கள் ஸாக்ஷாத் எம்பெருமானே என்பதை அறிந்து, கண்ணீர் மல்க சேவித்து நின்றனர். மேலும் மிருகண்டு ரிஷி - "இதே திருக்கோலத்தில் இங்கேயே எப்போதும் சேவை சாதிக்க வேணும்" என்று விண்ணப்பிக்க அடியாருக்கு எளியவனான் எம்பெருமான் அவருடைய விண்ணப்பத்தை ஏற்று இன்றும் திருக்கோவலூர் திவ்யதேசத்திலே சேவை சாதிக்கிறார்.
எம்பெருமான் உலகை அளந்த போது த்ரிவிக்ரமனுடைய திருவடிகள் அனைத்து சேதன அசேதனங்களையும் இரட்சித்தது. நல்ல காரியத்தைத் தடுத்த சுக்ராசார்யருக்கு கண் போனது. குருவின் சொல்லை கேட்காத மகாபலிக்கோ பாதாளமே கிடைத்தது.

ஆகவே தெய்வத்தின் கட்டளைகளான சாஸ்திரங்கள் வழிகாட்டுகிற படியே நடந்து ஆசார்ய அனுக்ருஹத்தையும் பெற்று நலமாக வாழ்வோம்.

எம்பெருமானுடைய பெருமையை சொல்லித் தலை கட்ட முடியாத நிலையில் அடியேனும் திருக்கோவலூர் ஸ்தல வரலாற்று சுருக்கம் என்ற பெயரில் யதா மதி யதா சக்தி எழுதியுள்ளேன்.

குறை இருக்குமாயின் அடியேனைத் திருத்திப் பணிகொள்ள பிரார்த்திக்கிறேன்.

வாழி யதிராஜன்!
தாசானு தாசன்

இராமானுஜ சிஷ்யன்

Tuesday, April 24, 2012

திருக்கோவலூர் திவ்ய க்ஷேத்திர விவரம்:


திருக்கோவலூர் திவ்ய க்ஷேத்ரம் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ளது. விழுப்புரத்தில் இருந்து சுமார் நாற்பது கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.

க்ஷேத்திர விவரம்:
திவ்யதேசம் - திருக்கோவலூர்
வேறு பெயர் - பூங்கோவலூர், கோபாலபுரம், கோபபுரி
நடுநாட்டு திருப்பதிகளுள் ஒன்று ஆகும்
நூற்று எட்டு திவ்யதேசங்களுள் ஒன்று ஆகும்
பஞ்ச கிருஷ்ணாரண்ய க்ஷேத்ரங்களுள் ஒன்று ஆகும்
வாமன திரிவிக்கிரம அவதார ஸ்தலம்
வாமனனுக்கு தனி சந்நிதி உண்டு
ஸ்ரீ விஷ்ணு துர்க்கைக்கு தனி சந்நிதி உண்டு
ஆகமம் - வைகானசம்
இந்தத் திருக்கோவிலைப் பற்றிய வரலாற்று விஷயங்கள் பாத்ம புராணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
க்ஷேத்திர பெருமாள்: ஸ்ரீ வேணுகோபாலன்
மூலவர் - ஸ்ரீ த்ரிவிக்ரம சுவாமி
உத்சவர் - ஸ்ரீ தேஹளீச ஸ்வாமி(இடைகழி ஆயன் என்று திருநாமம்)
தாயார் மூலவர் - ஸ்ரீ பூங்கோவல் நாச்சியார்
தாயார் உத்சவர் - ஸ்ரீ புஷ்பவல்லி தாயார்
ப்ரத்யக்ஷம் - மிருகண்டு மகரிஷி, பலி சக்கரவர்த்தி மற்றும் முதல் ஆழ்வார்கள்.
விமானம் - ஸ்ரீ கர விமானம்
நதி - ஸ்ரீ கிருஷ்ணபத்ரா(தென்பெண்ணை ஆறு)
திருக்கோவலூர் ஸ்ரீமத் எம்பெருமானார் ஜீயர் மடத்தைச் சேர்ந்த திருக்கோயில்

Thursday, April 19, 2012

திருக்கோவலூர்

உத்தமனான சர்வேஸ்வரன் பின்னானார் வணங்கும் சோதியாக, தேங்கிய மடுக்கள் போன்று, தானுகந்து அர்ச்சாவதரமாக எழுந்தருளி இருக்கும் திருத்தலங்கள் நம் பாரத தேசத்தில் பல உள்ளன. உயர்வற உயர்நலம் உடையவனான எம்பெருமானால் மயர்வற மதிநலம் அருளப் பெற்றவர்கள் ஆழ்வார்கள் என்று வழங்கப் பெறுவர். அவ்வாழ்வார்களும் எம்பெருமானின் பரம கிருபையினால் தன்னுடைய ஈரச் சொற்களால் எம்பெருமானை மங்களாசாசனம் பண்ணி அருளினர். இப்படி ஆழ்வார்களால் மங்களாசாசனம் பண்ணப்பட்ட திருத்தலங்கள் திவ்யதேசம் என்று கொண்டாடப்பட்டு வருகிறது என்பது எல்லோரும் அறிந்ததே.

ஆழ்வார்களின் ஈரச் சொற்களே நாலாயிர திவ்ய பிரபந்தம் ஆகும். ஆழ்வார்களால் பாடல் பெற்ற தலங்கள் நூற்றெட்டு ஆகும். பஞ்ச கிருஷ்ணாரண்ய க்ஷேத்ரங்களுள் ஒன்றானதும், நடு நாட்டு திருப்பதிகளுள் ஒன்றானதுமான திருக்கோவலூர் திவ்யதேசத்தில் தான் முதன்முதலில் இந்த திராவிடவேதமான நாலாயிர திவ்யப்பிரபந்தம் மங்களாசாசனம் பண்ணப்பட்டது. பூங்கோவலூரும் முதல் திவ்யதேசம் ஆனது.

இந்த திருத்தலம் பரம்பரையாக ஸ்ரீமத் எம்பெருமானார் ஜீயர் மடத்தில் பட்டத்தில் எழுந்தருளி இருந்த ஜீயர் சுவாமிகள் நிர்வகித்து வந்ததோடு, இன்றும் வர்த்தமான ஸ்ரீமத் எம்பெருமானார் ஜீயர் சுவாமி நியமனத்துடனே நிர்வாகங்கள், கைங்கர்யங்கள் மற்றும் உத்சவங்கள் எல்லாம் நடைபெற்று வருகிறது.